Saturday, July 11, 2009

இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம்

إن الحكم إلا للهஅல்லாஹ் தான் சட்டத்தை இயற்றுகின்றவன். அந்த அல்லாஹ்வினுடைய சட்டங்களே எங்களை ஆள வேண்டும் என்ற அகீதாவைச் சொல்லுங்கள். இதனை யாரும் அழுத்திச் சொன்னதாகத் தெரியவில்லை. இது அகீதாவிலே ஒரு விசயம். தவ்ஹீதிலே ஒரு முக்கியமான அங்கம். இதனை யாரும் மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசாமல் தவ்ஹீதைப் பற்றிப் பேச முடியாது சகோதரர்களே!! எப்படி அல்லாஹ் வணங்கப்படக் கூடியவனாக இருக்கின்றானோ! எப்படி அவன் உதவி செய்யக் கூடியவனாக இருக்கின்றானோ! அதே மாதிரி அல்லாஹ்! எங்களை வழிநடத்தக் கூடியவன். எங்களுக்கு சட்டங்களை வகுத்துத் தரக் கூடியவன். அவனது சட்டம் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எந்தக் காலத்திற்கும் ஒவ்வாதது அல்ல என்ற அந்தக் கருத்தை ஓங்கி நம்முடைய அழைப்பு பணியிலே முழங்குவோம்.ஏன் அதனை நாம் அழுத்திப் பேச வேண்டும் என்றால், அது தவ்ஹீதிலே ஒரு பகுதி. யூசுப் (அலை) அவர்களது வரலாற்றிலே நாம் இதனைப் பார்க்கின்றோம், சூரா யூசுப் - லே இறைவன் கூறுகின்றான் :إن الحكم إلا للهசட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அந்த சட்டம் வேறு மக்களுடைய கைகளிலே இருப்பதால் இந்த உலகத்திலே என்ன நடக்கின்றது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஹலால் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஹராம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் இருக்கின்றோமே!! நிச்சயமாக இந்தக் கருத்துக்களை நாம் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்துவது இரண்டாவது விசயம். முதலில் கருத்து மாற்றம் அனைத்து மக்களிடமும் உருவாக வேண்டும். சிந்தனை மாற்றம் வர வேண்டும்.கருத்துப் புரட்சியை முடுக்கி விட வேண்டும். இந்தக் கருத்து எப்படிப் பேசப்பட வேண்டும், எப்படித் தாக்கம் விளைவிக்க வேண்டும் என்றால், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள் அல்லவா?! ஸலாம் சொன்னால் பதில் சொல்வதற்குக் கூட அவர்களுக்கு முடியாமல், அந்தக் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கின்றார்கள் அல்லவா? அந்தளவுக்கு அந்தக் கிரிக்கெட் அவர்களது மூளையைத் தாக்கி இருக்கின்றது. அந்த மூளையை அந்த அளவு சலவை செய்திருக்கின்றதல்லவா? அந்த அளவுக்கு இந்த அடிப்படையான விசயங்கள் இந்த உலக மக்களிடையே பேசப்பட வைக்க வேண்டும். ஏன்? நம்மால் முடியவில்லை. அது தான் நம்மிடையே நிலவும் சில சூழ்நிலைகளினால் தாக்கமுற்று விடுகின்றோம். நம்முடைய அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம்.சமூகத்திலே மணமாகாத குமரிப் பெண்களுடைய விசயத்தைப் பற்றிப் பேசப்படும் பொழுது, எங்களது அடிப்படையான அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். வட்டியைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்கு அழுத்தம் கொடுத்து விட்டு, அடிப்படையான அகீதாவை மறந்து விடுகின்றோம். சமூகப் பிரச்னைகள் என்று வரும்பொழுது அதனைத் தீர்க்க ஓடுகின்றோம். அதனடியாகப் பின்பற்ற வேண்டிய அகீதாவை மறந்து விடுகின்றோம். அழைப்புப் பணியை மறந்து விடுகின்றோம். சகோதரர்களே! இது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அழகல்ல! உண்மையிலேயே அழைப்பாளர்கள் எந்தநிலையிலும் தங்களுடைய அடிப்படை விசயங்களிலிருந்து மாறிவிடக் கூடாது.அவர்கள் சமூக மாற்றத்தைக் கண்ணால் காணலாம். அல்லது காணாமலும் போகலாம்.ஷஹீத் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் தன்னுடைய திருமறைக்கு விளக்கவுரையாக எழுதிய திருக்குர்ஆன் நிழலிலே என்னும் தப்ஸீரின் முன்னுரையிலே கூறுகின்றார்கள் - ஒரு அழைப்பாளன் தன்னுடைய ஆயுளால் இந்த அழைப்புப் பணியை வரையறுக்க முடியாது. எனது ஆயுளுக்குள் இஸ்லாமியக் கிலாபத்தைக் கண்டே ஆக வேண்டும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த ஆசை அனைவருக்கும் இருக்கத் தான் வேண்டும். அதனை நான் என்னுடைய வாழ்நாளிலே கண்டு தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவற்றை நான் குறுக்கு வழியிலே கண்டு கொள்வேன் என்று நினைப்பதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும் கூடாது. எனவே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அடித்தளத்தைப் போடுவோம்.அந்த சுமையா, யாஸிர் தம்பதிகள் அவ்வாறு நினைத்தார்களா? இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? யாஸிர் (ரலி) அவர்களுக்கு அந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண முடிந்ததா? சகோதரர்களே! பத்ரிலும், உஹதிலும், அகழ் யுத்தத்திலும், ஷஹீதாகிப் போனார்களே! எத்தனையோ உத்தம ஸஹாபாக்கள்!! அவர்களெல்லாம் இஸ்லாமிய ஆட்சியைக் கண்டார்களா? சகோதரர்களே!! ஆனால், அவர்கள் அனைவரும் இந்த அடிப்படையான அகிதாவிலே நின்று கொண்டு. தங்களது ஆயுளிலே இந்த இஸ்லாமிய ஆட்சிக்கான, அந்த இஸ்லாமிய ஆட்சி உருவாகுவதற்கான தங்களது பங்களிப்பைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அத்தகைய பங்களிப்பை இந்த அழைப்புப் பணிக்கு வழங்கி விட்டுச் செல்வோம்.எனவே சகோதரர்களே! அரசியல் ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பொருளாதார ரீதியாக, சமூக சேவை ரீதியாக, மாற்றம் வேண்டும் என்று யோசிக்கின்றவர்கள், எமது சமூகத்தைப் பீடித்திருக்கின்ற ஒழுக்கச் சீர்கேடுகள், நூதனங்கள், பித்அத்துக்களை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் - பித்அத்துக்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே போன்று பொருளாதார மாற்றம் வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். ஒழுக்கம் மேம்பட வேண்டும். அதனையும் நாங்கள் விரும்புகின்றோம். சமூகத்தில் ஏழை மக்களுடைய நிலமைகள், அவை தரமுயர்த்தப்பட வேண்டும். விரும்புகின்றோம். ஆனால், இதனை இந்த அடிப்படையை மறந்து விட்டு, அகீதாவை மறந்து விட்டு மனம் போன போக்கில் செல்வதையும், அகீதாவைப் புறக்கணித்து விட்டு நாங்களும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் தான் ஈடுபடுகின்றோம் என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அழைப்புப் பணியில் ஈடுபடுகின்ற நாம் ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும். அந்தத் தீர்மானத்திலே நாங்கள் இறுதி வரைக்கும் தடம் மாறாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடத்தில் ஒரு ஸஹாபி வந்து சொன்னார்கள். யா ராசூலுல்லாஹ்!! எனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஒரு விசயத்தைச் சொல்லித் தாருங்கள். அந்த விசயத்தைப் பற்றி இனி யாரிடமும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாத, அந்த அவசியத்தை ஏற்படுத்தாத அளவில் அந்த விசயத்தைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று கேட்கின்றார்.قل أمنت بالله ثم الستقمஅல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று சொல். அதிலே உறுதியாக இருந்து கொள் என்று கூறுகின்றார்கள்.அதாவது அகீதாவிலே உறுதியாக இருந்து கொள். அதனை விட்டும் தடம் புரண்டு விடாதே என்று கூறுகின்றார்கள்.உனது அழைப்புப் பணியிலே எத்தனை பிரச்னை வந்தாலும், சமூகத் தீமைகள் குறுக்கிட்டாலும், அந்த அஸ்த்திவாரத்தின் மீது நின்று கொண்டு யோசி! சிந்தி! என்று தான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இத்தகைய மனிதர்களுக்குத் தான் அந்த மலக்குமார்களின் சுபச் செய்தி இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் தான் எங்கள் ரப்பென்று கூறி, அதிலே உறுதியாக இருந்தார்கள் அல்லவா! அவர்கள் மரணிக்கின்ற வேளையில் மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் துக்கப்படவும் வேண்டாம். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றுக் கொள்ளுங்கள். உலகத்திலும், மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு நேசர்களாக இருக்கின்றோம். உங்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் அந்த சொர்க்கத்திலிருந்து, அந்த அல்லாஹ்வின் விருந்தாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்று அந்த மலக்குகள் இத்தகையவர்களுக்கு சுபச் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

No comments:

Post a Comment