மானுட வசந்தத்தின் வருகை
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் மனித சமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.'ரபீஉன்' என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉல் அவ்வலில்' பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.ஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவுகின்ற ஒரு காலம் இது. மீண்டும் ஒரு வசந்தத்தின் தேவையை- வருகையை இன்றைய பூமி அவசரமாக வேண்டி நிற்கின்றது. நிச்சயமாக அந்த வசந்தத்தை சுமந்துவரும் ஆற்றல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உண்டு. ஆனால் அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை. மற்றுமொரு நபி வரப்போவதுமில்லை. எனினும் அன்னார் விட்டுச் சென்ற அல் குர்ஆனும் ஸுன்னாவும் பசுமையாக எங்களிடம் இருக்கின்றன. இன்றைய உலகில் வரட்சியைப் போக்கிடும் ஆற்றல் அவற்றுக்கு நிறைவாகவே உண்டு. ஒரு புத்துலகை- புதுப்பொழிவுடன் உருவாக்கும் தகுதியும் உண்டு.ஆனால் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மைந்தர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சிலபோது விழித்துக் கொண்டாலும் அடிப்படைப் பணியை மறந்துவிட்டு வீண் வாதப் பிரதிவாதங்களிலும் அர்த்தமற்ற தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றனர். நபிகளார் பிறந்த இம்மாதத்தில் அன்னார் கொண்டுவந்த தூதுக்கு உயிரூட்டுவதை, அதனை உலகறியச் செய்வதை விட்டுவிட்டு அன்னாரை வைத்து வீண் சர்ச்சைகளைக் கிளப்பி குழப்பம் விளைவிக்கின்றனர்.நபிகளாரின் அந்தஸ்து என்ன, அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாமா, அவர்கள் பேரில் மௌலூது ஓதலாமா, அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாமா என்று வம்புப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். எத்தனை நூற்றாண்டுகளாக இச்சண்டைகள் முடிவின்றி தீர்வின்றி தொடர்கின்றன!! இதனால் எம் சமூகத்தில் எத்தனை, எத்தனைப் பிரிவுகள், பிளவுகள் உருவாகியுள்ளன. இத்தகைய சர்ச்சைகளால் இஸ்லாம் அடைந்த பயன்தான் என்ன? நபிகளாரின் தூதுத்துவப் பணி கண்ட பிரயோசனம் யாது? இவ்வாறு நாம் சிந்திப்பதில்லை. சிலர் எம்மை சிந்திக்க விடுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்தப் பிரச்சினைகளில் வாழ்க்கை நடாத்துபவர்கள், வயிறு வளர்ப்பவர்கள்.இனியும் இந்நிலை தொடர அனுமதிக்கலாகாது. நபிகளாரின் பெயராலேயே, அவர்களும் அவர்களின் வழிவந்த நல்லடியார்களும் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகத்தைத் தகர்க்கும், துண்டாடும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கக்கூடாது. சிறுசிறு சன்மார்க்க பிரச்சினைகளையெல்லாம் பூதாகரமான பிரச்சினையாக சித்தரித்து சமூகத்தில் விஷமம் செய்வோர் இனங்காணப்பட்டு ஓரங்கட்டப்படல் வேண்டும்.இயக்கங்கள், ஜமாஅத்கள், தரீக்காக்கள் உட்பட ஏனைய சன்மார்க்க அமைப்புகள் இருந்துவிட்டு போகட்டும். அவற்றின் நன்மைகளை சமூகம் பெறத்தான் வேண்டும். ஆனால் அவற்றின் பெயரால் சண்டை போடுவதற்கும், முட்டி மோதிக் கொள்வதற்கும் இனி முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். இதற்காக இஸ்லாத்தில் பொதுவான அடிப்படைகளை வைத்து முழு சமூகத்தையும் வழிநடாத்தக்கூடிய ஒரு நடுநிலை சக்தி உருவாக வேண்டும், அது ஆரம்பத்தில் உலமாக்கள் மட்டத்திலிருந்து தோன்றுதல் வேண்டும். அப்போதுதான் நபிகளார் காண விரும்பும் இலட்சிய முஸ்லிம் சமூகமாக நாம் மாறமுடியும்
No comments:
Post a Comment