Saturday, January 9, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 02 (The Intellectual Leadership of Islam - Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

சித்தாந்தம் என்பது அல்லாஹ்(சுபு)வின் அருள்வெளிப்பாடு (Revelation) மூலம் மனிதர்களுக்கு எத்தி வைக்கும் விதத்தில் ஒரு மனித அறிவின் வாயிலாக (Human Mind) தோன்ற வேண்டும். அல்லது மதிநுட்பம் வாய்ந்த ஒரு மனித அறிவின் மூலம் வெளிப்பட வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் அருள்வெளிப்பாடு மூலமாக ஒரு மனிதரின் அறிவின் வாயிலாக வெளிப்படும் சித்தாந்தம் சரியானதாக இருக்கும். ஏனெனில் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் படைத்த படைப்பாளனான அல்லாஹ்(சுபு)விடமிருந்து அது வந்திருக்கிறது. ஆகவே, நிச்சயமாக அது மிகச்சரியான சித்தாந்தமாகவே இருக்கும். ஆனால், மனித அறிவின் மூலம் தோன்றும் சித்தாந்தம் தவறானதாகவே இருக்கும். ஏனெனில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்காததும், வரையறைக்கு (Limitation) உட்பட்டதுமான மனித அறிவிலிருந்து அது தோன்றியிருக்கிறது. மேலும் மனிதர்களின் ஒழுங்குப்படுத்தும் திறனில் பாகுபாடும் வேற்றுமைகளும், முரண்பாடுகளும், வாழ்கின்ற சூழலின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும். இதன் விளைவாக மனித சிந்தனையிலிருந்து பிறக்கும் சித்தாந்தத்தில் முரண்பாடுகள் நிறைந்த வழிமுறைகள் தோன்றி மனிதனின் பெரும் துன்பத்திற்கு காரணமாகிவிடும். ஆகவே, மனித அறிவில் தோன்றிய சித்தாந்தம் அடிப்படை சிந்தனையான அகீதாவிலும், அதிலிருந்து பிறக்கும் வழிமுறையிலும் அடிப்படையிலேயே தவறு உடையதாக இருக்கும்.இதன் முடிவாக, சித்தாந்தத்தின் அடித்தளம், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனையாக (Comprehensive Idea - Al Fikrah Kulliyyah) இருக்க வேண்டும். அதனை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் வழிமுறை (System) மனித வாழ்வியலின் அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் அந்த சித்தாந்தம் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்யும் விஷயமாகும். முழுமையான சிந்தனைதான் சித்தாந்த்தின் அடித்தளமாகும். ஏனெனில் அதுதான் அகீதா என்ற வழிநடத்தும் அறிவார்ந்த தலைமை சிந்தனை (Intellectual Leadership Concept) முழுமையான இந்த சிந்தனையின் அடிப்படையில் வாழ்க்கையைப் பற்றிய மனிதனின் கண்ணோட்டமும் அறிவார்ந்த வழிகாட்டுதலும் விளக்கப்படும். மேலும் எல்லாவித சிந்தனைகளும் இதன் மீது கட்டமைக்கப்டும். மனித வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குரிய அனைத்து தீர்வுகளும் இதிலிருந்தே பிறக்கும். வழிமுறை (Tareeqah - System) மிக அவசியம் என்ற உண்மை எவ்வாறு விளங்கிக் கொள்ளப்பட வேண்டுமெனில், அகீதாவிலிருந்து பிறக்கும் வழிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலும், அகீதாவை பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதலும் அதை தஃவா (Daw'ah) மூலம் மனிதர்களுக்கு எத்தி வைப்பதற்குரிய வழிகாட்டுதலும் கொண்டதாக ஒரு சிந்தனை இல்லாவிடில், பின்பு அந்த சிந்தனை கற்பனையும் வெற்று அலங்காரமும் கொண்ட வறட்டு தத்துவமாகவும், எதார்த்த வாழ்க்கையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்துவதற்கு ஆற்றல் இல்லாத ஏட்டுக் கதையாகவும் ஆகிவிடும். ஆகவே அகீதா (அடிப்படை கோட்பாடு), வாழ்வியல் விவகாரங்களுக்குரிய தீர்வுகள் (Solution for life Affairs) மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் (Systems - Tareeqah) ஆகிய அனைத்தும் ஒரு சித்தாந்தம் நிலைத்து நிற்பதற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.
எனினும், வெறும் சிந்தனையும் அதன் வழிமுறையையும் மட்டும் பெற்றிருந்தால் மட்டும் அது சரியான சித்தாந்தம் என்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒரு சித்தாந்தத்தின் உண்மையான மதிப்பை (Valitity) நிரூபிக்கும் விஷயம் அதனுடைய அகீதாவாகும். ஏனெனில் அகீதாதான் அறிவார்ந்த அடிப்படை சிந்தனை, அதன் மீதுதான் அனைத்து சிந்தனைகளும் கட்டமைக்கப்படுகின்றன. அதன் கண்ணோட்டங்கள் விளக்கப்படுகின்றன. அதிலிருந்துதான் அனைத்து தீர்வுகளும் அதன் வழிமுறைகளும் பிறக்கின்றன. ஆகவே, அறிவார்ந்த அடிப்படை சிந்தனை சரியானதாக இருக்கும் பட்சத்தில் சித்தாந்தமும் சரியானதாகவே இருக்கும், அதற்கு சரியான அடிப்படை இல்லாவிடில் அது தவறான சித்தாந்தமாகவே இருக்கும்.ஒரு முழுமையான சிந்தனை மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்தக்கூடியதாகவும், பகுத்தறிவின் மீது கட்டமைக்கப்பட்டதாகவும் இருந்தால், அது சரியானதாக இருக்கும். அதே வேளையில் அது மனித இயல்புக்கு முரண்பட்டதாகவும், பகுத்தறிவின் மீது கட்டமைக்கப்படாததாகவும் இருந்தால், அது தவறானதாக இருக்கும். மனிதனின் இயற்கை தன்மைக்கு பொருந்தக் கூடியதாக இருப்பது என்பதன் பொருள் என்னவெனில் அந்த அகீதா மனிதனின் இயற்கை பலவீனத்தை அறிந்து கொண்டதாகவும், அனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய படைப்பாளன் ஒருவனின் தேவை அவனுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். அதாவது, மனிதனது சன்மார்க்க உள்உணர்வோடு (Religious Instinct) ஒத்துப் போகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அறிவின் மீது கட்டமைக்கப்படுவது என்பதன் பொருள் என்னவெனில், அந்த அகீதா இயற்பொருட்கள் - சடப்பொருட்கள் (Matter) மீதோ அல்லது சமரச பேரத்தின் வாயிலாக கிடைத்த தீர்வின் மீதோ கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடாது.
உலகில் நிலைபெற்றிருக்கும் சித்தாந்தங்களை நாம் ஆய்வு செய்தோமானால், அவை மூன்றே மூன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அவையாவன: முதலாளித்துவம் (Capitalism) கம்யூனிஸம் (Communism) மற்றும் இஸ்லாம் (Islam) ஆகியவைகளாகும். முதல் இரண்டு சித்தாந்தங்களும் இன்று அரசுகளினால் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் இன்று எந்த அரசாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அது பல்வேறு நாடுகளில் தனி மனிதர்களால் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் உலகம் முழுவதிலும் சர்வதேச அளவில் அது நிலைபெற்றிருக்கிறது.
மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தின் தலையீட்டை நீக்கிவிடுவது (Secularism) என்ற அடிப்படையை முதலாளித்துவம் கொண்டிருக்கிறது. இந்த சிந்தனைதான் அதன் அடிப்படை கோட்பாடான அகீதாவாகவும் (Doctrine), அதன் வழிநடத்தும் அறிவார்ந்த தலைமை சிந்தனையாகவும் இருக்கின்றன. (Leadership Concept - Qiyaadah Fikriyyah) இந்த அறிவார்ந்த அடிப்படையின்படி வாழ்வியல் முறைமைகளை (Systems of life) மனிதன் உருவாக்குகின்றான். ஆகவே, அது கீழ்காணும் விதமான சுதந்திரங்களை மனிதனுக்கு பாதுகாத்து வழங்குவது அவசியமாகிறது. அவையாவன, நம்பிக்கை சுதந்திரம் (Freedom of belief - Hurriyat ul Aqeedah) பேச்சு சுதந்திரம் (Freedom of Expression - Hurriyat ur Ra’i) சொத்து சுதந்திரம் (Freedom of ownership - Hurriyat ul Milkiyah) மற்றும் தனிமனித சுதந்திரம் (Personal Freedom - Hurriyatush Shakhsiyyah) ஆகியவைகளாகும். சொத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த சித்தாந்தத்தின் தனித்துவ அம்சமாக முதலாளித்துவம் விளங்குகிறது. மேலும் இந்த கோட்பாட்டிலிருந்து பிறந்த தனித்தன்மையான விஷயமாகவும் இருக்கிறது. ஆகவே, இந்த சித்தாந்தத்தின் தனித்தன்மையான அம்சமான முதலாளித்துவத்தின் அடிப்படையில் அதற்கு முதலாளித்துவ சித்தாந்தம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜனநாயக ஆட்சிமுறையைப் பொருத்தவரை அது இந்த சித்தாந்தத்துடன் இணைத்து பேசப்படுகிறது. இதனடிப்படையில், மனிதர்கள் தங்கள் வாழ்வியல் வழிமுறைகளை தாங்களே வகுத்துக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அதிகாரத்தின் பிறப்பிடமாக விளங்குகின்றார்கள். அவர்கள்தான் வாழ்வியல் வழிமுறைகளை வகுத்துக் கொடுக்கிறார்கள். தங்களை ஆட்சி செய்வதற்காக நாட்டின் ஆட்சியாளர்களை பணியில் அமர்த்துகிறார்கள். தேவைப்படும்போது ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுகிறார்கள். விரும்பும் ஆட்சி அமைப்புகளை உருவாக்கி நிலைபடுத்துகிறார்கள். ஏனெனில், ஆட்சி செய்வது என்பது மக்கள் விரும்பும் ஆட்சி அமைப்பின்படி அவர்களை ஆட்சி செய்வதற்காக மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கம் இடையில் ஏற்படுத்தப்படும் ஒரு பணி ஒப்பந்தம்தான்.முதலாளித்துவத்தின் ஒரு அங்கமாக ஜனநாயக ஆட்சிமுறை இருந்தபோதும், அதன் பொருளாதார அமைப்புடன் ஒப்பிடும்போது அதற்கு குறைந்த அளவு முக்கியத்துவம்தான் வழங்கப்படுகிறது. இது ஏனெனில், மேற்கத்திய சமுதாயத்தில் முதலாளித்துவ பொருளாதார அமைப்புகள், அரசுகளின் மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது எந்த அளவுக்கெனில், முதலாளித்து சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் தொழில் அதிபர்களே உண்மையான ஆட்சியாளர்களாக திறம்பட விளங்கி வருகிறார்கள். மேலும் ஜனநாயக ஆட்சிமுறை என்பது இந்த சித்தாந்தத்திற்கு மட்டும் உரியதல்ல. கம்யூனிஸ்டுகளும் அதற்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள். மேலும் அவர்கள் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள். ஆகவே, முதலாளித்துவ சித்தாந்தம் என்று இதனை அழைப்பது மிகவும் பொருத்தமானதுதான்.
ஐரோப்பாவிலும் ரஷியாவிலும் அரசாட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களும் பேரரசர்களும் வரம்பு மீறி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் தங்களின் அடாத செயல்களுக்கு கருவியாக மதத்தை பிரயோகித்த காலகட்டத்தில்தான் முதலாளித்துவ சித்தாந்தம் உண்மையில் தோன்றியது. கிருஸ்தவ மத குருமார்களை இதற்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் விளைவாக ரத்தம் சிந்தும் கடுமையான போராட்டம் உருவாகி சில தத்துவ அறிஞர்களும் சிந்தனையாளர்களும் முற்றாக மதத்தை நிராகரித்து விட்டார்கள்;. வேறு சிலர்கள் மதத்தை ஏற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வியல் விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது என்று கோரினார்கள். முடிவாக, பெரும்பான்மையான அறிஞர்களும் சிந்தனையாளர்களும் குறிப்பிட்ட ஒரு சிந்தனையின் அடிப்படையில் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த சிந்தனைதான் மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரித்து வைப்பது (Secularism) என்பதாகும். இயல்பாகவே அரசாங்கத்திலிருந்து மதம் பிரிக்கப்படுவதில் இது முடிவடைந்தது. இவ்வாறாக, மதத்தை அங்கீகரிக்கும் அல்லது நிராகரிக்கும் விவாதங்களை தவிர்த்துக் கொள்ளும் ஒரு அபிப்ராயத்தின்பால் ஒரு சமாதானம் எட்டப்பட்டது. மேலும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து மதத்தை பிரித்து வைக்கும் சிந்தனைக்குள் மட்டும் விவாதம் சுருட்டப்பட்டது. மதத்தின் பெயரால் அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்துக் கொள்ள விரும்பிய கிருஸ்தவ குருமார்களுக்கும், மதத்தையும், மதகுருமார்களின் அதிகாரத்தையும் முற்றாக நிராகரிக்கும் தத்துவஞானிகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சமரச தீர்வாக இந்த (Compromise Solution) சிந்தனை கருதப்பட்டது.
ஆகவே, இந்த சிந்தனை மதத்தை நிராகரிக்கவும் செய்யாது, நேரடியாக அங்கீகரிக்கவும் செய்யாது, அதாவது மனிதர்களின் வாழ்வியலில் மதம் தலையிடுவதை அனுமதிக்காது, மாறாக மதத்தை வாழ்வியல் விவகாரங்களிலிருந்து பிரித்து வைக்கும். இவ்வாறு, மேற்கத்திய நாட்டவர்கள் தழுவியுள்ள அடிப்படை கோட்பாடான அகீதா என்னவென்றால், மனித வாழ்க்கையின் அடிப்படை விவகாரங்கள் அனைத்திலிருந்தும் மதத்தை பிரித்து வைப்பது என்பதுதான். இந்த அகீதாதான் மேற்கத்தியர்களின் அறிவார்ந்த அடிப்படையாக விளங்குகிறது. இதன் மீதுதான் அனைத்து சிந்தனைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் அறிவார்ந்த வழிகாட்டுதலும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் தீர்மானிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில்தான் வாழ்வியல் விவகாரங்கள் அனைத்திற்கும் தீர்வுகள் எட்டப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேற்கத்திய மக்கள் அழைப்பு விடுக்கின்ற சித்தாந்தத்தின் வழிகாட்டும் தலைமை சிந்தனையும் இதுதான்.வாழ்வியலிருந்து மதத்தை பிரித்து விடுவது என்ற சிந்தனை மறைமுகமாக மதத்தை அங்கீகரிக்கிறது.
இதன் மூலம் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதையும், உயிர்தெழும் நாளையும் (Day of Ressurrection) அது அங்கீகரிக்கிறது. ஏனெனில் இவைதான் மதம் என்ற அடிப்படையில் அதன் அடித்தளமாக இருக்கின்றன. இதை ஒப்புக்கொள்வதன் மூலம் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் இவைகளுக்கு முன்பு என்ன இருந்தது, இவைகளுக்கு பிறகு என்ன இருக்கப்போகிறது ஆகியவைப்பற்றியும், இவைகளுக்கு மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றியும் உள்ள ஒரு சிந்தனையை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் மதம் என்ற ஒன்று இருப்பதை அது நிராகரிக்கவில்லை. மாறாக, வாழ்வியலிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கோரும்போது, மதம் இருப்பதை மறைமுகமாக அது உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில் வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற சிந்தனை, இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு முன்னுள்ளதற்கும், இதற்கு பின்பு வரப்போவதற்கும் மத்தியில் எந்தவித தொடர்பும் இல்லை என்ற கருத்தையும், தனிமனிதனுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள ஒரு தொடர்பு மாத்திரம்தான் மதம் என்ற கருத்தையும் ஏற்படுத்துகிறது. இதனடிப்படையில் இந்த அகீதாவும் (வாழ்வியலிலிருந்து மதத்தைப் பிரித்து வைப்பது), அதன் அனைத்து எண்ணக்கருக்களும், மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழுமையான சிந்தனையை (Comprehensive Thought) உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த விளக்கங்களின் வெளிச்சத்தில் மற்ற சிந்தனைகளைப் போலவே முதலாளித்துவமும் ஒரு சித்தாந்தமாகும் எனலாம்.
தொடரும்...

No comments:

Post a Comment