Friday, July 30, 2010

ஏன் ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள் என்பது முடியாது ??

ஏன் ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள் என்பது முடியாது ??

ஒரே சமுதாயம் – ஒரே பிறை – ஒரே பெருநாள்- இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம் காலத்தின் தேவை கருதி மறு பிரசுரம் செய்யப்படுகின்றது என்று வேம் கோள் என்ற தளத்தில் வெளியான துண்டுப்பிரசுரம் இங்கு மீள் பதிவு செய்யபடுகின்றது
“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)
ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான் விரிவாக பார்க்க.
“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்களாக ஆகலாம்.” (3:183)
இங்கு அல்லாஹ் (சுபு) நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செயவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் (சுபு) விற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியகாவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”. (3:183)
இவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் வட்டார வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.
நபி (ஸல்) நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (அபூஹீரைரா (ரலி) முஸ்லிம்)
“பிறையைப் பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”. (இப்னு உமர் (ரலி), புகாரி)
இங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (aam) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (Soomoo) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (Ru’yath) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி (ஸல்) காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி (ஸல்) காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.
“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்”. (அபூஹூரைரா (ரலி), திர்மிதி)
எனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட்டு ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் முஸ்லிம்கள் ஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.
பிறையைப் பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி (ஸல்) முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.
“பிறையைப் பார்க்காத காரணத்தால் முஸ்லிம்கள் நோன்பை ஆரம்பிக்காம லிருந்தனர். அப்போது மதீனாவில் குடியிருக்காத ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி (ஸல்) அவரிடம் மு°லிமா? என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அல்லாஹூ அக்பர்! ஒருவர் பார்த்தாலே அனைத்து முஸ்லிம்களுக்கும் போதுமானது என்றவர்களாக தானும் நோன்பு நோற்க ஆரம்பித்தார்கள். மக்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்”. (இப்னு அப்பாஸ் (ரலி), அபூதாவூது)
ஹனபி மத்ஹபின் பிரபலமான இமாமான ஸர்கஸி (ரஹ்) மேற்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பிறை பார்க்காமல் நோன்பு நோற்கலாகாது என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். (A1 – Mabsoot: 3: 52))
மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி (ஸல்) அம்மனிதரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி (ஸல்) தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி (ஸல்) காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதி முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர் (ஒட்டிய பகுதியில் வாழ்ந்தாலும் கூட) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹீகும் ஷரியா விற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.
“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” (ஆயிஷா (ரலி), முஸ்லிம்)
“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்விட்டார்”. (அம்மார் (ரலி), புகாரி)
நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களுக்கு நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.
“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”. (அபூமஸ்வூத் அல்அன்ஸாரி (ரலி), தாரகுத்னி)
“மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபி (ஸல்) நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் தொழுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர் (ரலி), அபூதாவூது, அஹ்மது, தாரகத்னி)
வெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி (ஸல்) காலத்திற்கு பின்னர் இப்னு அப்பாஸ்(ரலி) காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
“உம்முல் பழ்ல் (ரலி) என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையைப் பார்த்தோம் என்றேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா? என்றேன். அதற்கவர்கள் போதாது நபி (ஸல்) இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள். (குரைப், முஸ்லிம்)
இது ஹதீஸ் அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கருத்து ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) கட்டளையை இப்னு அப்பாஸ்(ரலி) ஒவ்வொரு பகுதியினரும் பார்த்தாக வேண்டும் என்று விளங்கிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது.
இதை இமாம் ஸவ்கானி (ரஹ்) உறுதி செய்கிறார்கள். அவர் நைலுல் அவ்தார் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்குவது போல் அவரது கருத்திலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி (ஸல்) கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” (2:185) என்ற வசனத்தை வைத்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ் (சுபு) குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியனிரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.
“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது) என்ற நபி (ஸல்) எச்சரிக்கையை சமர்ப்பிக் கின்றோம். குர்ஆனில் நாஸிக் (மாற்றக்கூடியது), மன்ஸூக் (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. 2:184 வசனம் மன்ஸூக் ஆகும். 2:185 வசனம் நாஸிக் ஆகும், தப்ஸீர் இப்னு கதீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது 2:183, 2:184 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (Fidya) செய்து வந்தனர். எனவே தான் “நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்தை அறிந்து கொள்வீர்கள்”) என்பதாக அல்லாஹ் (சுபு) குறிப்பிடு கிறான். அதன்பின் இச்சட்டத்தை மாற்றி அந்த மா தத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீ° சான்று பகர்கின்றது.
“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (2:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் என்றவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (2:185) அருளப்பட்டது”. (புகாரி – 4507)
நாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.
“இன்னும் ஃபஜ்ரு நேரம் எனற் வெள்ளை நூல் (இரவு என்னும்) கருப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.” (2:187)
இவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (Imsak), நோன்பை நிறைவு செ ய்யும் நேரமும் (Iftar) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப் படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.
மேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை (ஹளவசடிnடிஅல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்யலாம் என்ற கருத்து ஹூகும் ஷரியவிற்கு மாற்றமானதாகும். ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை. மத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- முழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமாகது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம். இமாம் ஜூஸைரி (ரஹ்) ஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:
1, எந் ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லத பெண் ஆகியயோர் பிறை பார்த்ததை அவர் ஃபாஸிக் ஆயிருந்தாலும் விசாரணையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. அவர் ஃபாஸிக் ஆனவரா? இல்லையா? என்பதை காதி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார். (Fiqh al Madhaahib al Arba’a)
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-
“ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)
தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge – 336)
தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)
தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page – 380)
மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page – 133)
இதே போன்று ஃபிக்ஹீ கிரந்தங்களிலும் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. ஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (ரஹ்மத்துல் உம்ம)
தெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. (ஃபதாவா ஆலம்கீரி, ஃபதாவா காழிகான்) பிறையைக் கண்டுவிட்ட செய்தி யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் தொலை தூரக் கணக்கின்றி நோன்பு நோற்பது கடமையாகிவிடும் (மஜ்மஉல் ஃபதாவா)
ஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். (அல்முஃனி, அன்இன்ஸாப்)
பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையைப் பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி (ஸல்) கட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எவரொருவர் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும். (ஃபிக்ஹ் சுன்னாஹ்).
சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால்? கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர் (கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி (ஸல்) கற்றுத் தந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் இது குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
“எவர் ஒருவர் அஸபிய்யாவிற்காக (தேசியவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மர ணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”. (அபூதாவூது).
எனவே, முஸ்லிம்களே! உங்களில் ஓர் ஆடவரோ அல்லது மகளிரோ அவர் எந்த பகுதியை சார்ந்தவராயினும் பிறையைப் பார்த்தது உறுதி செய்யப்பட்டால் அதை ஏற்று செயல்படுங்கள். அத்தகவல் அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் பகுதியிலிருந்து அல்லது பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் சரியே. எனவே எந்த மனிதருடைய காலதமாதமான அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் நோன்பை நோற்பதும் அதை நிறைவு செய்வதும் அல்லாஹ் (சுபு) வின் திருப்பொருத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அல்லாஹ் (சுபு) விற்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களக்கும் கட்டுப்பட்டு ஒரே உம்மாவாக செயல்பட அல்லாஹ் (சுபு) உலக முஸ் லிம்கள் அனைவர்களுக்கும் அருள்பாலிப்பானாக.
“எவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்த பிறகும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையோர்களுக்கு மகத்தான் வேதனை உண்டு”. ( 3: 105)

No comments:

Post a Comment