Tuesday, August 31, 2010

“தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!- தமிழ் பத்திரிகை

“தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!- தமிழ் பத்திரிகை

தினமணி (26.8.10) ஏட்டில் பாஜக தலைவர் இல.கணேசன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தனக்குள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார். காஷ்மீர் தொட்டு தென்காசி வரை வந்திருக்கிறார். அவ்வளவிலும் அதே துவேஷம்
“இப்போது மன்மோகன் சிங் காஷ்மீருக்கு சுயாட்சி தருவோம் என்கிறார். பாகிஸ்தானுக்கு வேலையே இல்லாமல் அல்வாத்துண்டு போல வெள்ளித்தட்டில் வைத்து வழங்க இசைந்துவிட்டாரே!”- என்று இல.கணேசன் பொருமியிருக்கிறார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தருவது எப்படி அந்தப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு கொடுப்பதாகும்? பாஜகவுக்கு கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கிடையாது. அதனுடைய கனவெல்லாம் ஒற்றையாட்சி முறைதான் என்பதை இது அம்பலப்படுத்துகிறது விரிவாக பார்க்க
விஷயம் என்னவென்றால், நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு இதர இந்திய மாநிலங்களை விடவும் கூடுதல் சுயாட்சி வழங்கியுள்ளது. காரணம், அந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க 1947 அக்டோபரில் ஒப்புக்கொண்டார் முஸ்லிம்கள் அதிகமாக இருந்த அந்த ராஜியத்தின் இந்து மகாராஜா. அந்த அடிப்படையில்தான் அந்த இணைப்பை ஒப்புக்கொண்டார் அந்த ராஜியத்தின் மக்கள் தலைவராகிய ஷேக் அப்துல்லா.
இந்த 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே வம்படி வழக்கடி செய்து வந்தது இன்றைய பாஜகவின் அன்றைய வடிவமாகிய ஜனசங்கம். இதற்கு காங்கிரசிலும் சில சக்திகள் இரையாகின. கொஞ்சங்கொஞ்சமாக ஜம்மு-காஷ்மீரின் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.
இதோ இல.கணேசனின் தலைவர் எல்.கே.அத்வானி “எனது நாடும் எனது வாழ்வும்” எனும் தனது சுயசரிதையில் எழுதியிருப்பதை வாசியுங்கள்.
“வெறுக்கப்பட்ட ‘அனுமதி முறையை’ அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியக் குடியரசின் நிறுவனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகளையும் அது ரத்து செய்தது. இப்படியாக தேர்தல் கமிசன் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் அதிகாரங்கள் அந்த மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் ‘பிரதம மந்திரி’ எனும் பெயர் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் “தோல்விதான்” இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் – என்பது பற்றிய நமது கவலை, குறிப்பாக 370வது சரத்து பற்றிய நமது கவலை, இன்னும் போக்கப்படவில்லை.”
விரிந்த சுயாட்சி தருவதாகச் சொல்லி அந்த ராஜியத்தை நம்மோடு இணைத்துக் கொண்ட பிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதற்கு மூலகாரணம் ஜனசங்கம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் முஸ்லிம் வெறுப்பு. அந்த மாநில மக்களில் ஆகப்பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்தால் இத்தகைய நிலையை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை நிர்ப்பந்தித்து வந்தார்கள். அதுவும் பல சமயங்களில் அவர்களது நிர்ப்பந்தத்திற்கு பணிந்தது. ஜம்மு-காஷ்மீரின் இந்த இணைப்பு வரலாறை மூடி மறைத்துவிட்டு, 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று இப்போதும் விவகாரம் செய்து வருகிறது பாஜக.
ஜம்மு-காஷ்மீரில் இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் இதுவே. இதை இப்போதாகிலும் உணர்ந்து அந்த மக்களின் நியாயமான உரிமைகளை இந்திய அரசு மதிக்க வேண்டும். பறிக்கப்பட்ட அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மாநில சுயாட்சியை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது எந்த வகையிலும் அங்குள்ள பிரிவினை சக்திகளை ஆதரிப்பதாகாது. உண்மையில் இதுவே அந்தப் பிரிவினை சக்திகளை தனிமைப்படுத்தும். மன்மோகன் அரசு இந்தச் சரியான பாதையில் சற்றே காலடி எடுத்து வைக்கப் பார்ப்பது போலத் தெரிகிறது. உடனே இல.கணேசன் கோஷ்டியார் அதை எதிர்த்துச் சண்டமாருதம் செய்கிறார்கள்.
காஷ்மீர் எனும் அந்த அழகான பள்ளத்தாக்கைத் தொடர்ந்து கலவர பூமியாக்குகிறார்கள் அங்குள்ள பிரிவினைவாதிகள் அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரமும்தான், அவர்களது இந்த அடாவடிப்போக்கும்தான் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியா முழுக்கவுள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவும் விஷத்தைக் கக்குகிறார் இல.கணேசன். “மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பல பாகிஸ்தான்களை உருவாக்கத் துணைபோகிறது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்களை அரசே அடையாளம் கண்டு முத்திரை குத்தியுள்ளது. அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கூடுதல் வசதிகள். ஏற்கெனவே முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள இடங்களில் இந்துக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் பறிபோய்விட்டன” என்று வெறித்தனமாக எழுதியிருக்கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கு.
பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், முஸ்லிம் லீக் காங்கிரஸ் ஆகியவை மட்டும் காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ் இந்து மகாசபை ஆகியவற்றின் முஸ்லிம் எதிர்ப்பும், அவை கிளப்பிவிட்ட மதப் பகைமையும் காரணமே. இவர்களது கொடூர வெறுப்பையும் வெறியையும் கண்டே முஸ்லிம் மக்கள் லீக்கின் பிரிவினைவாதத்திற்கு இரையானார்கள். அந்த வரலாற்று உண்மையை கவனமாக மறைத்துக் கொண்டே இவர்கள் பாகிஸ்தான் பிரிவினை பற்றிப் பேசுகிறார்கள்.
இப்போதும் கூடப் பாருங்கள், முஸ்லிம்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்யப் புறப்பட்டால் உடனே “பல பாகிஸ்தான்களை” உருவாக்குகிறது அரசு என்று கூசாமல் வெறித்தனத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியாவில் பத்து சதவீதத்திற்கும் மேலே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே பிறமதத்தவருடன் கலந்து வாழ்கிறார்கள். அதையே சிதறிக் கிடக்கிறார்கள். எனவும் கூறலாம். இதனால் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் தங்களது நியாயமான உரிமைகளை உரத்துப்பேச வழியில்லாமல் வதங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கூறலாம்.
அதனால்தானே சச்சார் குழுவின் அறிக்கையில் அவர்களது இன்றைய பரிதாப வாழ்வு வெளிப்பட்டுள்ளது. கல்வியில், அரசுப்பணியில், பொது வாழ்வில் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் கிடைக்க வில்லை என்கிறது அந்த அறிக்கை. அது மட் டுமல்ல, இந்து மதமாச்சரியம் உள்ள காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிறது அறிக்கை. இதைச் சரிசெய்ய சில நல்ல ஆலோசனைகளையும் அது வழங்கியுள்ளது. இவற்றை இன்னும் அமல்படுத்தவில்லை மத்தியிலுள்ள மன்மோகன் அரசு. ஏதோ ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கப் பார்க்கிறது. அதற்கும் கட்டையைக் கொடுக்கிறது இல.கணேசன் கோஷ்டி.
இவர்களது நோக்கம் எல்லாம் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை பாமர இந்துக்கள் நெஞ்சில் விதைத்து இங்கே மதக்கலவரங்களை உருவாக்குவதுதான். இதற்காக முஸ்லிம்களுக்கு அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்குவதாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கலவரத்தை உருவாக்க ஆங்காங்கே கொளுத்திப்போடுகிறார்கள். மசூதிகளுக்கு முன்னால் வேண்டுமென்றே கொட்டடிப்பது முதல் அரசமரத்துப் பிள்ளையாரை வீதிக்கு இழுத்து வந்து விவகாரம் செய்வதுவரை விதவிதமான வேலைகளில் இறங்குகிறார்கள்.
இதன் உச்சமாய் பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, மாலேகாவின் ஜனநெருக்கடியான பிக்குசவுக் எனும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஆறு பேர் மாண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்தது 2008 செப்டம்பரில். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் என்று புலனாய்வுகள் சொல்லின. இதைப் பிரமாதமாகத் துப்புதுலக்கி வெளிக்கொணர்ந்தவர் ஹேமந்த் கார்க்கரே எனும் காவல்துறை அதிகாரி. ஆனால், அவரும் அதே ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மர்மம் இன்னும் விடுபடவில்லை.
“கடந்த பத்து ஆண்டுகாலமாகத் தென்காசி நகரில் எந்த இந்து நடவடிக்கையையும் நடத்த அனுமதியில்லை” என்று அநியாயமாய் பொய் சொல்லியிருக்கிறார் இல.கணேசன். இந்து மக்கள் தங்கள் இயல்பான மதவாழ்வை அங்கு நடத்தித்தான் வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை. அனேகமாக, இவருக்குள்ள வருத்தம் 2008 ஜனவரியில் அங்கு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்ததே, அப்படி அதற்குப் பிறகு நடக்கவில்லையே என்பதாக இருக்கும்! தங்கள் அலுவலகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்களே இப்படியொரு குண்டை வைத்துக் கொண்டார்கள்! சங் பரிவாரத்தைச் சார்ந்த 8 பேர் கைதானார்கள். மதக்கலவரத்தைத் தூண்டவே இப்படிச் செய்ததாக வாக்குமூலம் தந்தார்கள்.
இவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பதை மக்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. நல்ல வேளையாக காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “காவி பயங்கரவாதம்” பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இப்படி ஒருபுறம் இவர்களே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மறுபுறம் நமது சகோதரர்களாகிய முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள்.
இவர்களது மதவெறிப் பிரச்சாரத்திற்கு பாமர இந்துக்கள் பலியாகிவிடக்கூடாது. முஸ்லிம்கள் மீது சங் பரிவாரத்தின் கோபம் எல்லாம் தங்களது வர்ணாசிரமக் கட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்களே என்பதுதான். பஞ்சமர்கள், சூத்திரர்கள் மீது இவர்களுக்கு என்ன கோபமோ அதே கோபம்தான் முஸ்லிம்கள் மீதும். இதைப் புரிந்து கொண்டால் போதும் இவர்களது சதி வேலைகளுக்கு யாரும் இரையாகமாட்டார்கள்.
இதில் வருந்தத்தக்க இன்னொரு விஷயம், பொதுவான பத்திரிகை எனும் தோற்றம் காட்டிக்கொண்டு ‘தினமணி’யானது பாஜக வின் மதவெறிப்பிரச்சாரத்திற்கு மேடை போட்டுத் தருவது, அந்த ஏட்டின் வாசகர்கள்தாம் இதைத் தட்டிக்கேட்க வேண்டும்.
நன்றி- www.theekkathir.in

No comments:

Post a Comment