Thursday, April 14, 2011

ஜனநாயகம் இஸ்லாத்திற்கு அன்னியமானதா ?

இன்றைய இஸ்லாமிய வாதிகளிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் உள்ளது மாத்திரமல்லாமல் ஆராதிக்கப்படும் நிலைக்கும் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல. ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர். வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.இக்கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஜனநாயகம் என்பது இஸ்லாத்துக்கு முரணான ஒன்று தான், ஆனால் இஸ்லாத்துக்கு முரணான கொள்கை அல்லது மதம் என்று கருத கூடிய அளவு அபாயகரமானது அல்ல, எனவே கால சூழலுக்கேற்ப ஜனநாயகத்தின் அடிப்படையில் வாழ்வது, அதற்காக பாடுபடுவது தவறல்ல என்று வாதிடுவோரின் வாதங்கள் சரி தானா ? ஜனநாயகம் என்பது அந்நிய மதமா என்பது குறித்து குரான் மற்றும் சுன்னாவின் ஒளியில் பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.குரானினோ, ஹதீஸ் கிரந்தங்களிலோ, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் புத்தகங்களிலோ நாம் ஜனநாயகம் என்ற வார்த்தையை பார்க்க முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஜனநாயகம் என்ற சொல்லாடலோ அல்லது சித்தாந்தமோ இல்லை.ஜனநாயகத்தின் தன்மையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளங்கி கொள்ள முஸ்லீமின் அடிப்படை கடமையான ஈமானை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒருவர் ஈமான் எனும் உறுதி மொழியை முழுமையாய் தன் வாழ்வில் கடைபிடிக்கும் போதே அவர் முஸ்லீமாய் கணிக்கப்படுவார். ஈமான் எனும் அம்சமே முஸ்லீமை நிராகரிப்பாளரிடமிருந்து வேறுபடுத்தி காட்ட கூடிய ஒன்றாய் விளங்குகிறது. ஈமான் இல்லாமல் ஒருவர் எத்துணை நல்ல செயல்கள் செய்தாலும் அவற்றிக்கு மறுமையில் எப்பயனும் இல்லை என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. ஒரு முஸ்லீமின் ஈமான் குறித்து விளங்கி கொள்ள கீழ்காணும் குரான் வசனங்களை பார்க்கலாம்.இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருக்குரான் 51:56)மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூத்துகளை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (திருக்குரான் 16:36)(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் (திருக்குரான் 2 : 256)எவர்கள் தாகூத்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (திருக்குரான் 39 : 17)மேற்காணும் திருமறையின் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு முஸ்லீம் ஈமான் கொண்ட பின்னர், அல்லாஹ்வை தவிர மற்றவைக்கு தலை வணங்கவோ, கட்டுபடவோ, அவற்றின் கட்டளைகளுக்கு கீழ்படியவோ கூடாது என்பதை வலியுறுத்துவதை காணலாம். எனவே ஒருவரின் ஈமான் முழுமை அடைய வேண்டுமானால் இஸ்லாம் தவிர அனைத்து கொள்கைகளின் தாக்கங்களிலிருந்தும் விடுபட வேண்டும்.யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறாரோ, அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலாலாக்குகிறாரோ அவரை தாகூத் என அல்லாஹ் வர்ணிக்கிறான். யாரெல்லாம் தங்களை முஷ் அரியாக (சட்டமியற்றுபவர்) கருதுகிறார்களோ, அவர்களும் தாகூத்தின் எல்லைக்குள் வருவார்கள். சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்க, அதற்கு மாற்றமான சட்டங்களை வகுப்பவர் ஆட்சியாளராக இருந்தாலும், இயக்க தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ, எம்,பி என மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி அவர்களும் இஸ்லாத்தின் பார்வையில் தாகூத்தாக கருதப்படுவார். ஏனெனில் அவர்களை அல்லாஹ் தன் அடிமைகளாக படைத்து தன்னுடைய சட்டத்துக்கு கீழ்படிய சொல்லி இருக்கும் போது, அதற்கு மாற்றமாக இறைவனின் வரம்புகளை மீறி அல்லாஹ்வை போல் தன்னையும் சட்டம் இயற்றும் தன்மை கொண்டவனாக நினைக்கிறான்.இறைவன் இயற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கொண்டுள்ள அடிமையான மனிதன் “இலாஹ் முஷ் அரி” எனும் இறைவனின் தன்மைக்கு சவால் விடுகிறான். இம்மாதிரி இறைவனின் அதிகாரத்துக்கு நேரடியாக சவால் விடும் இத்தகையவர்கள் நிச்சயமாக தாகூத் என்பது மாத்திரமல்லாமல் தாகூத்தின் முண்ணணி தளபதிகளாகவே கருத வேண்டியதிருக்கிறது. தாகூத்திடம் தீர்வு தேட வேண்டாம் என்று மார்க்கம் தடுத்திருக்கும் போது தாகூத்தின் தளபதிகளாகவே மாறி போனவர்களின் ஈமான் குறித்து என்ன சொல்வது? இவர்களை குறித்து தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்” (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (திருக்குரான் 4 : 60)இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹீ இது குறித்து கூறும் போது “ தாகூத் என்பது மனித வடிவில் உள்ள ஷைத்தானாகும்.அவனுடைய சட்டத்தை ஏற்று கொண்டு மனிதர்கள் தங்கள் பிரச்னையை முறையிடுகின்றனர். அதன் மூலம் ஷைத்தான் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்கிறார்.ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) இது குறித்து கூறும் போது அல்லாஹ்வின் புத்தகம் அல்லாமல் வேறு ஒன்றின் அடிப்படையில் யார் ஆள்கிறாரோ, அவர் தாகூத் ஆவார் என்கிறார்கள்.இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்களோ “ அல்லாஹ் தன் அடிமைகளுக்கு ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறுபவர்கள் எல்லோரும் தாகூத்களே. அது வணக்கமாக அல்லது பின்பற்றுதலாக அல்லது கீழ்படிதலாக எதுவாக இருப்பினும் வரம்புகளை மீறுபவர்கள் அனைவரும் தாகூத்களே. ஒவ்வொரு சமூகத்தின் தாகூத்கள் யாரெனில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் வகுத்த சட்டத்திற்கு மாற்றமானதை பின்பற்றுபவர்களும், அல்லாஹ், அல்லாஹ்வின் தூதரின் சட்டத்திற்கு முரணானவற்றின் அடிப்படையில் தீர்ப்பு கூறுபவர்களுக்கு அடிபணிபவர்களுமே ஆவார்கள்” என்கிறார்.மேலும் “ இறைவனின் வேதம், நபிகளாரின் வழிமுறை அல்லாமல் அதற்கு முரண்படும் வேறொன்றிடத்தில் தன் பிரச்னைக்கான தீர்வை தேடினால் அது நிச்சயம் தாகூத்திடம் தீர்வு தேடியதை போன்றதேயாகும் என்றும் இப்னுல் கையூம் (ரஹ்) கூறுகிறார். ஜனநாயகம் இஸ்லாமிய பார்வையில் ஹராம் என்பதை இந்திய அரசியல் ஹராமா ?, ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு உள்ளிட்ட பல கட்டுரைகள் இதர கொள்கைகள் மற்றும் தீனை நிலைநாட்டல் லேபிள்களின் கீழ் தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து சகோதரர்களுக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களின் கூற்றாக குரானில் வரும் வசனத்தை நினைவுபடுத்தி இக்கட்டுரையை முடிக்கிறேன்.”இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.” (திருக்குரான் 60 : 4)

No comments:

Post a Comment