துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு
சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழக ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட இது அவ்வளவாக விவாதிக்கப்படாததும் அரபுலகில் நிகழவிருக்கும் மிகப் பெரும் மாற்றத்திற்கு கட்டியம் கூறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து இந்திய முஸ்லீம் தலைமைகளும் மெளனம் காப்பது தான் ஆச்சர்யமளிக்கிறது.
சரி, அப்படி என்ன தான் நடந்தது துனிஷியாவில் ? துனிஷியாவில் பிற அரபு நாடுகளை போல் சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்தது. 1987 அக்டோபரில் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு பின் ரத்தமில்லா புரட்சியின் மூலம் நவம்பர் 1987ல் ஆட்சியை பிடித்த ஜைனுல் ஆபிதின் பின் அலி 23 ஆண்டு காலமாக தன் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து போலி தேர்தல்கள் மூலம் விடாப்பிடியாக ஆட்சி செய்து கொண்டிருந்த பின் அலி மக்களின் பேரெழுச்சியின் காரணமாக பதவி விலகி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் மக்களை ஆட்டி படைத்தாலும் பின் அலி சுகவாசியாய் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எதிர்கட்சிகளை குறிப்பாக ஊழல்மய ஆட்சியை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைத்த இஸ்லாமிய இயக்கத்தினரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா பாணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுபடுத்தவே செய்ததாக நாடகமாடினார்.
பின் அலியின் 23 ஆண்டு கால கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்ட ஏராளமான துனிஷியர்களில் ஒரு இளைஞன் வேலை தர கோரி அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கு அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தன்னை நெருப்பில் பொசுக்கி கொண்டு இறந்து போனான். அவனின் மரணத்தை தியாகமாக சித்தரித்து ஓட்டு மொத்த துனிசியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.
இம்மக்கள் எழுச்சி துனிஷியாவை விட மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியை புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்கு பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.
பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “ கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்” எனும் பதாகையை தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஏமனை போலவே தற்போது சவூதியும் உள்நாட்டு குழப்பத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. மன்னர் அப்துல்லாவின் உடல்நலக் குறைவால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவது என்ற வாரிசுரிமை போராட்டத்தால் சவூதி அரச குடும்பம் கலகலத்து கிடக்கிறது. இளவரசர் ஃபைசல் மன்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பானவர் என்பதால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்துள்ள செய்திகள் ஒரு முஸ்லீம் நாட்டின் மன்னராக யார் வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் பொறுப்பை எடுக்க லாயக்கற்ற நிலையை நிதர்சனமாய் காட்டுகிறது.
துனிஷியாவை தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா இப்போராட்டத்திற்கு பின் பட்டும் படாமல் காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது என்றும் இனி மேலாவது ஜனநாயக பாதைக்கு துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஜனநாயக கோஷத்தை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபடுவோரை எல்லாம் நாட்டை விட்டு துரத்தும் அல்லது நாட்டுக்குள்ளே சிறை வைக்கும் சவூதி அரேபியா, முஸ்லீம் உம்மாவின் செல்வங்களை கொள்ளையடித்த ஒரு சர்வதிகாரிக்கு, இஸ்லாம் இம்மண்ணில் மேலோங்க பாடுபட்டோரை சித்ரவதை செய்தவருக்கு தஞ்சமடைய இடம் கொடுத்துள்ளது ஆச்சரியமான ஒன்றல்ல.
சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.
துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.
இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
துனிஷியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக இப்புவியில் நிலைநாட்ட பாடுபடுவோரை சித்ரவதை செய்யும் அரசுகள், முஸ்லீம் உம்மாவை சில சட்ட பிரச்னைகளில் மாத்திரம் காலம் முழுக்க உழல வைக்கும் அடிப்படையில் செயல்படும் முஸ்லீம் அரசுகள் பாடம் கற்க வேண்டும்.
இறைவன் தந்த கனிம வளங்களை கொண்டு கொழிக்கும் பொருளாதரத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆடம்பர ஹோட்டல்கள், தீவுகள், விமானங்கள் என சொகுசாகவும், துப்பாக்கியே தூக்க தெரியாத ராணுவத்துக்காக பில்லியன் கணக்கில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யும் அரபு நாடுகள் அப்பணத்தை ஏழை முஸ்லீம் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். தங்களிடம் எஞ்சியுள்ள பணத்தை தானமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகனோ கொடுத்து அவர்களையும் வளப்படுத்த வேண்டும். மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுவதை நிறுத்தா விட்டால், துனிஷியாவிலிருந்து பாடம் கற்காவிட்டால் துனிஷியா உங்கள் வீட்டு கதவையும் தட்டும். அடக்கி வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவின் எழுச்சி வெடித்து சிதறும் போது நிச்சயம் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களே துனிஷியா உங்களுக்கு ஓர் அபாய சங்கு, கிலாபத்திற்கு இது ஓர் எழுச்சி கீதம்.
No comments:
Post a Comment